Skip to main content

கொடுமுடியில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவு!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

Maximum rainfall recorded in Kodumudi!

 

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (14.04.2021) அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

 

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பொழிந்தது. அதேபோல் ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மயிலாடுதுறையில் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், வைத்தீஸ்வரன் கோயில் நடை, வேலூரில் காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பொழிந்தது. சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் மழை பெய்தது. சென்னையிலும் பரவலாக மழைபொழிந்தது.

 

இந்நிலையில், தமிழகத்தில் கொடுமுடியில் அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 10 சென்டிமீட்டர் மழையும், பவானியில் 9 சென்டிமீட்டர் மழையும், நம்பியாரில் 8 சென்டி மீட்டர் மழையும், சென்னிமலை, ஈரோட்டில் தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 7 சென்டி மீட்டர் மழையும், பள்ளிப்பட்டில் 5.6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

இந்நிலையில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் காரைக்கால், புதுச்சேரியிலும் மூன்று மணிநேரத்திற்கு  மழை பொழிவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.