![Maximum rainfall in Avadi!](http://image.nakkheeran.in/cdn/farfuture/J06-V9O9MVMqgf4WUwoEbUS--Q3I0igPvAj4vX-9Zdk/1638021466/sites/default/files/inline-images/z1412.jpg)
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஆவடியில் அதிகபட்சமாக 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரம், செங்கல்பட்டு, செய்யாறு ஆகிய இடங்களில் தலா 18 சென்டிமீட்டர் மழையும், காட்டப்பாக்கத்தில் 17 சென்டி மீட்டர் மழையும், திருக்கழுக்குன்றத்தில் 16 சென்டி மீட்டரும், மதுராந்தகம், சோழவரம், பரங்கிப்பேட்டையில் தலா 15 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
தற்பொழுது சென்னையில் மீண்டும் மழைபொழிந்து வருகிறது. நீலாங்கரை, கொட்டிவாக்கம், பெருங்குடி, திருவான்மியூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பெருங்களத்தூர், வண்டலூர், சென்ட்ரல், மீனம்பாக்கம், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் மழைபொழிந்து வருகிறது. அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.