Skip to main content

“முதல்வர் உத்தரவுப்படி அனைத்து இடங்களிலும் மாஸ் கிளீனிங்”- அமைச்சர் பேட்டி!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

Mass cleaning everywhere as per the order of the Chief Minister

 

ஈரோடு மாநகராட்சி காசிபாளையம் ஓடையில் 20ந் தேதி மாஸ் கிளீனிங் நடைபெற்றது. இந்தப் பணியைத் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி பார்வையிட்டு அதனை ஆய்வு செய்தார். பிறகு அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, “தற்போது மழைக்காலம் தொடங்க இருப்பதால் அனைத்து இடங்களிலும் முதல்வர் உத்தரவுப்படி மாஸ் கிளீனிங்  செய்யப்பட உள்ளது. அதன்படி இன்று காசிபாளையம் ஓடை சுத்தப்படுத்தப்பட்டுத் தூர்வாரப்படுகிறது.  ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக 85 இடங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளது. இது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.  

 

சோலார், அரச்சலூர், கனிராவுத்தர் குளம் போன்ற பகுதிகளில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக வீட்டுவசதித் துறை மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்து ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டிட உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் பெரிய அளவு குறைபாடுகள் எதுவும் இல்லை. சிறிய சிறிய குறைபாடுகள் உள்ளன. கடந்த கால ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள் உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் நிதி உதவியுடனும், பயனாளிகள் தங்கள் தரப்பில் ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும். சில பயனாளிகளால் பணம் கட்ட முடியவில்லை.  அவர்களுக்கு சுலப முறையில் வங்கிகளில் கடனுதவி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

 

கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுவசதித் துறையில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சித்தோடு அருகே 85 மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது, ஆனால் அந்த இடம் கரடு முரடாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அங்கு வெட்டி வைத்தால் அருகில் உள்ள மற்ற வீடுகள் பாதிக்கப்படும். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று இடத்தில் அவர்கள் அனுமதியுடன் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஓடை புறம்போக்கில் உள்ளவர்களுக்குப் பட்டா வழங்க இயலாது. ஆனால் அவர்களுக்கு மாற்று இடங்களில் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” இவ்வாறு கூறினார். பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உட்படப் பலர் உடனிருந்தனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்