Skip to main content

படுகொலை செய்யப்பட்ட தந்தை.. நீதிபதியான மகன்

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Marshal Yesuvadian, son of  VAO Lourdes Francis, was elected as judge
ஸ்ரீபதி

டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீபதி என்ற பழங்குடியின பெண் வெற்றி பெற்று சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். ஏழ்மையிலும் கல்வி கற்று பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பு படிக்கும் போது ஸ்ரீபதிக்கு திருமணமான நிலையில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீபதி தமிழ்நாட்டின் முதல் பழங்குடியினர் பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். 

Marshal Yesuvadian, son of  VAO Lourdes Francis, was elected as judge
லூர்து பிரான்சிஸ்

வலி மிகுந்த ஸ்ரீபதியின் வெற்றிப்பாதையை போன்றே, மார்ஷல் ஏசுவடியான் என்பவரின் வெற்றியும் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அவரது அப்பா லூர்து பிரான்சிஸின் படுகொலை. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓவாக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ், அங்கு நடைபெறும் மணல் கொள்ளையை தடுப்பதில் படுதீவிரமாக செயல்பட்டு வந்தார். அதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பல் லூர்து பிரான்சிஸை அலுவலகத்தில் புகுந்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் நீதிமன்றம் ஆயுள்தண்டனை கொடுத்து சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Marshal Yesuvadian, son of  VAO Lourdes Francis, was elected as judge
மார்ஷல் ஏசுவடியான்

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வை எழுதிய மார்ஷல் ஏசுவடியான் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். எனது தந்தை, உன்னை நீதிபதியாக பார்க்க வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் படுகொலை செய்யப்பட்ட 5 ஆவது நாள் சிவில் நீதிபதி தேர்வு அறிவிப்பு வந்தது. எனது தந்தையின் கனவை நிறைவேற்ற தேர்வுக்கு விண்ணப்பித்தேன். இப்போது வெற்றியும் பெற்றுவிட்டேன். அவரது ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது” என மார்ஷல் ஏசுவடியான் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். மார்ஷல் ஏசுவடியானுக்கு அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.