தமிழகத்தையே உலுக்கிய மரக்காணம் விஷச்சாராய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மீதம் 6 பேரை சிபிசிஐடி போலீசார் விசாரணை முடித்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி விஷச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது தொடர்பான சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது .இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். தலைமறைவான மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 15 ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 11 பேரையும் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் கடந்த 23ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை மறுநாள் 24ஆம் தேதி நடைபெற்றது. 11 பேரையும் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
26 ஆம் தேதி அதாவது இன்று மாலை 6 மணிக்குள் 11 பேரையும் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சாராய வியாபாரிகள் என முத்து, ரவி உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணை முடிந்து ஒரு நாளுக்கு முன்பாக நேற்று ஆஜர்படுத்தி இருந்தனர். அப்பொழுது ஐந்து பேரையும் வரும் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் எஞ்சிய இளையநம்பி, அமரன் உள்ளிட்ட ஆறு பேரிடம் விசாரணை நிறைவு செய்து சிபிசிஐடி போலீசார் 6 பேரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய நிலையில் 6 பேரையும் ஜூன் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.