காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்ந்து மறுத்தால் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 6 வார காலத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்க உத்திவிட்டு 2 வாரங்கள் கடந்த நிலையில் மத்திய அரசு அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் கடத்தி வருவதும், தமிழக அனைத்துக் கட்சி, விவசாயிகள் சங்க தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்காததும் கண்டிக்கதக்கது.
இதனை கர்நாடகம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மேலாண்மை வாரியம் அமைப்பதை ஏற்க மாட்டோம் என அம்மாநில முதல்வர் சித்தராமையா பேசி வந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இக் கூட்டம் சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
கர்நாடக மாநில அரசு தலைமை செயலாளர், நீர் பாசனத்துறை செயலாளர்களிடம் மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும், உச்ச நீதிமன்றமும் அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து உரிய விளக்கம் கேட்க வேண்டும்.
மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலோ, பேசினாலோ நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்ந்து மறுத்தால் பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்.
முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் சந்திக்க உள்ளது வரவேற்கத்தக்கது. இச்சந்திப்பால் காவிரி பிரச்சினையில் நல்ல தீர்வை எட்ட வழி கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.