புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் உள்ள நாகுடி அருகே உள்ளது கோபாலபுரம் கிராமம். முழு விவசாய கிராமம். இந்த கிராமத்தில் இருந்த தச்சுத் தொழிலாளர்கள் கடந்த 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பிற்காக அந்தமான், சிங்கப்பூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, துவரங்குறிச்சி என பல்வேறு இடங்களுக்கும் குடும்பம் குடும்பமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
சென்ற இடங்களில் நல்ல வேலையும் வருவாய் கிடைக்கவே அங்கே நிரந்தரமாக தங்கி கிடைத்த வருவாயில் இருந்து தங்கள் குழந்தைகளை நன்றாகவே படிக்க வைத்துள்ளனர். அந்தமான் சென்ற குடும்பத்தில் சிலர் காவல்துறையிலும் பணியாற்றுகின்றனர். பிழைக்கச் சென்ற இடத்தில் நன்றாக இருந்தாலும் கூட சில வருடங்களுக்கு ஒரு முறையாவது சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். ஆனால், மொத்த உறவுகளும் ஒரே இடத்தில் ஒன்று கூட முடியவில்லை. அப்போது தான் இவர்களுக்குள் பேசிக் கொண்டபோது நாம் எல்லோரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது ஒன்று சேர வேண்டும் அதற்கு நம் குல தெய்வத்திற்கு பூஜை போட்டு அன்று அனைவரும் ஒன்று கூடும் நாளாக இருக்கட்டும் என்று முடிவு செய்தனர்.
இத்தனை முடிவுசெய்த பிறகே 'ஆமாம் நம்ம குலதெய்வம் எங்கே இருக்கு? எப்படி போறது? யாருக்கும் தெரியாதே... நம்ம குடும்பத்தில் ஏதாவது குறை நடந்தால் சாமியார்கிட்ட போனால் முதல்ல குலதெய்வத்திற்கு பூஜை போடுன்னு சொல்றாங்க. ஆனா இத்தனை வருசமா நமக்கு குலதெய்வமே தெரியாம இருக்கோமே' என்றனர். அதன் பிறகு அவர்களின் தேடல் அதிகமானது.
நீண்டகால தேடலுக்கு பிறகு அவர்களுக்கு அவர்களின் குலதெய்வம் யார், இருக்குமிடம் எங்கே என்பதும் தெரிய வந்தது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கருப்பண்ணசாமி மற்றும் பிடாரியம்மன் கோயில் தான் நம் குலதெய்வம் என்று கண்டுபிடித்து சிலர் முதலில் வந்து வழிபட்டு சென்ற பிறகு பல ஊர்களிலும் உள்ள மற்ற உறவுகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு பிறகு தங்களின் குலதெய்வத்தை தேடி கண்டுபிடித்த அந்தமான் குடும்பம் சில ஆண்டுகள் கருபண்ணசாமிக்கு பொங்கல் வைத்து படையல் வைத்து வழிபட்டதோடு வேறு என்ன மாதிரியான பூஜைகள் நடக்கிறது என்பதை உள்ளூர் மக்களிடமும் பூசாரியிடமும் கேட்டு தெரிந்து கொண்டனர்.
இந்நிலையில் புதன்கிழமை எங்கள் உறவுகள் எல்லாம் பூஜை போட வருகிறோம் என்று சேந்தன்குடி க்கு தகவல் சொன்ன அந்தமான் குடும்பங்கள் சொன்னபடியே பல ஊர் உறவுகளையும் வேன்களில் அழைத்துக் கொண்டு வந்த அந்தமான் குடும்பங்கள் 15 கிடா, கோழிகள் வெட்டி படையல் பூஜை போட்டு ஊருக்கே விருந்து கொடுத்து சந்தோசமாக சென்றனர்.