தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, கேரள ஆளுநர் ஆரிஃப் கானுக்கு எதிராக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரள ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்த சூழலில், கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். 3 மசோதாக்களுக்கு 2 ஆண்டுகளாகவும், 5 மசோதாக்களுக்கு 1 ஆண்டாகவும் நிலுவையில் உள்ளன என்று கூறி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “வாக்களித்த மக்களுக்கு கடமையாற்ற நினைக்கும் மாநில அரசுகளை கைவிலங்கு போட நினைக்கும் ஒன்றிய அரசின் எடுபிடிகளால் ஏற்பட்டிருக்கும் அவலம். தமிழ்நாட்டில் 25, கேரளாவில் 8 மசோதாக்கள் ஆளுநர்களிடத்தில் நிலுவை. 2 மாநில அரசுகளும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு. மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டுமென்று அண்ணா குரல் கொடுத்ததின் முக்கியத்துவம் இப்போதாவது தெரிகிறதா? வெல்லட்டும் திராவிடம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாக்களித்த மக்களுக்கு கடமையாற்ற நினைக்கும் மாநில அரசுகளை கைவிலங்கு போட நினைக்கும் ஒன்றிய அரசின் எடுபிடிகளால் ஏற்பட்டிருக்கும் அவலம். தமிழ்நாட்டில் 25, கேரளாவில் 8 மசோதாக்கள் ஆளுநர்களிடத்தில் நிலுவை. 2 மாநில அரசுகளும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு. மாநிலங்களுக்கு…— Mano Thangaraj (@Manothangaraj) November 3, 2023