Skip to main content

'அலைக்கழிப்பால் பெண்கள் அவதி; நடத்தப்படும் விதம் கண்டிக்கத்தக்கது'- பாமக ராமதாஸ் 

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

manner of women in which it is being conducted is reprehensible'- Pmk Ramadoss

 

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகள் தமிழ்நாடு முழுவதும் பெண்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுவது ஒருபுறம் இருக்க, மேல்முறையீடு செய்யச் செல்லும் இடங்களில் அவர்கள் நடத்தப்படும் விதம் கண்டிக்கத்தக்கதாகும்.

 

திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்குடன், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15-ஆம் நாள் தொடங்கப்பட்டது. அதற்கு சில வாரங்கள் முன்பிலிருந்தே இந்தத் திட்டத்தின்படி பயன் பெற விரும்பும் குடும்பத் தலைவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஒட்டுமொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறபட்ட நிலையில், அவற்றில் 1.06 கோடி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. மீதமுள்ள 57 லட்சம் விண்ணப்பங்களை தமிழக அரசு தள்ளுபடி செய்து விட்ட நிலையில், அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து அரசுத் தரப்பில் வெளிப்படையான விளக்கம் அளிக்கப்படவில்லை.

 

ஏற்கப்படாத விண்ணப்பங்களுக்கு சொந்தக்காரர்களான 57 லட்சம் பேரும் கோட்டாட்சியர்களிடம் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களிலும், தமிழக அரசின் பொது சேவை மையங்கள் வழியாகவும் கடந்த 18-ஆம் நாள் முதல் மேல்முறையீடு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அங்கு அவர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்படுவதுடன்,  தொழில்நுட்பக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களைக் காட்டி அலைக்கழிக்கப் படுகின்றனர். இது தமிழ்நாட்டு ஏழைக் குடும்பத்து பெண்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல ஊர்களில் அதிக வருமானம், அதிக சொத்துகள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு  மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், வறுமையில் வாடும் தங்களின் மகளிர்  உரிமைத்  தொகை விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஒரே மாதிரியான சூழலில் வாழும் பெண்களில் ஒருவருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு, இன்னொருவருக்கு அது மறுக்கப்பட்டால், அது பாதிக்கப்பட்ட மக்களிடம் பெரும் வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் என்பது கடந்த கால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இதை அரசு மனதில் கொள்ள வேண்டும்.

 

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் நிகழும் தவறுகள் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை தமிழக  அரசும் உணர்ந்திருக்கிறது. அதனால் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு  எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், மகளிர் உரிமைத் தொகைக்காக இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே விண்ணப்பித்து உரிமைத் தொகை கிடைக்காதவர்களின் மேல்முறையீடுகள், புதிய விண்ணப்பங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தாலும் கூட அனைவரையும் மனநிறைவடையச் செய்ய முடியாது என்பதே உண்மை.

 

மகளிர் உரிமைத் தொகை என்பதே அனைவருக்கும் அடிப்படை வருவாய் (Universal Basic Income) என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது ஆகும். பல நாடுகளில் இந்த உரிமைத் தொகை திட்டம் அனைவருக்கும் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் கூட இந்த திட்டம் அனைவருக்கும் செயல்படுத்தப்படும் என்று தான் கூறப்பட்டிருந்ததே தவிர, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதற்கு மாறாக, மொத்த  குடும்பங்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாகவும், விண்ணப்பித்தவர்களில் மூன்றில் இரு பங்கிற்கும் குறைவானவர்களுக்கும் மட்டும் உரிமைத் தொகை வழங்குவது எந்த வகையிலும் சரியல்ல.

 

அதுமட்டுமின்றி, இந்தியாவில் பொதுவினியோகத் திட்டத்தை வருமான வரம்பு இல்லாமல் அனைவருக்கும் செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு தான். அதற்காக உச்சநீதிமன்றத்தின் பாராட்டுகளையும் தமிழகம் பெற்றுள்ளது. அதே அணுகுமுறை தான் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் தொடர  வேண்டும். அதன்படி, தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க வேண்டும். குறைந்தபட்சம், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும், இனி விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கும் எந்த வகையான கட்டுப்பாடும் இல்லாமல் ரூ.1000 மகளிர் உரிமைத்  தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெலங்கானாவில் ‘மகாலட்சுமி திட்டம்’ தொடக்கம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023

 

'Mahala Lakshmi Project' started in Telangana
கோப்புப்படம்

தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

அதே சமயம் தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தெலுங்கானாவில் நேற்று முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் பெண்கள், திருநங்கைகள் நாளை (09.12.2023) முதல் அரசுப் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் இல்லை என தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பெண்கள், திருநங்கைகள் பயணிகள் பேருந்து, விரைவுப் பேருந்து என தெலங்கானா மாநில எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக அளித்தியிருந்த நிலையில், ஆட்சி பொறுப்பேற்று இரு தினங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய அன்புமணி ராமதாஸ்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரமணி தந்தை பெரியார் நகர் பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார். உடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மாவட்டச் செயலாளர் ஜி.வி. சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.