திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னைநகர் பகுதியில் இயங்கி வந்த ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை 9 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளாகி ஆறுபேர் பலியாகியுள்ளனர். இந்த கோர வெடி விபத்தில் பட்டாசு ஆலை இடிந்து விழுந்ததில் கட்டிட இடிப்பாடுகளுக்குள் சிக்கி சுரேஷ், அறிவு, வீரையன், பாபு, நாராயணன், சிங்காரவேலு ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஷேக் அப்துல்லா பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரித்த போது, அப்பகுதி மக்கள் கூறியது...
“மன்னார்குடி முன்னாள் அதிமுக கவுன்சிலரான கண்ணதாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமானது அந்த வெடிமருந்து ஆலை. இதனை கண்ணதாசனே நிர்வகித்துவருகிறார். இவர் உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு மிகவும் நெருக்கமானவர்.
அமைச்சரோடு இருக்கும் நெருக்கத்தை சாதகமாக்கிக்கொண்டு, காமராஜ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது அங்குள்ள திரவுபதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, மிகப்பெரிய அளவில் பங்களா கட்டி குடி போனார்.
இந்த நிலையில் திரவுபதி அம்மன் கோயில் மிகவும் பாழடைந்து போனதை அறிந்த அப்பகுதி மக்கள் கும்பாபிஷேகம் செய்ய விரும்பி அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர், வேலைகளையும் முடித்து கும்பாபிஷேகத்திற்கான தேதிகள் குறிக்கப்பட்ட நிலையில் பந்தல் போடவும் மற்ற பணிகள் செய்யவிடாமலும் கண்ணதாசனும் அவரது மைத்துனர் சிங்காரவேலுவும் தடையாக இருந்து மாடுகளையும் வாகனங்களையும் அங்கு நிறுத்தி இடையூறு கொடுத்து வந்தனர்.
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வெடிமருந்து ஆலையில் நேர்ந்த இந்த விபத்தில் இத்தனை உயிர்கள் பறிபோயிருக்கின்றன. சம்பவத்தில் சிங்காரவேலுவும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது திரவுபதி அம்மனின் கோபம்தான்".