விவசாயிகளை பாதிக்கக்கூடிய வேளாண் சட்டத் திருத்தத்தை உடனே திரும்பப்பெறவேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழுவினர் பேரணியாக வந்து மன்னார்குடி தலைமை தபால் நிலயத்தை முற்றுகையிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தியும், தொடர்ந்து 18 நாட்களுக்கு மேலாக டெல்லியில் பசியோடும், குளிரோடும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் விவசாயிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தலைமை தபால் நிலயத்தை நோக்கி பேரணியாக வந்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர் 150க்கும் மேற்பட்டோர், தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி முற்றுகையிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உழவர்கள், அரசு கொள்முதல் நிலையத்திலிருந்து தனியார் கொள்முதலுக்குச் செல்வார்கள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு கொள்முதலுக்கு யாரும் வராத காரணத்தினால் அதை மூடுகிறோம் எனச் சொல்லி அரசு கொள்முதல் நிலையங்களை மூடிவிட்டால் குறைந்தபட்ச ஆதார விலை இல்லாத நிலையில் உழவர்கள் பொருட்களை வீட்டில் சேமித்து வைக்க முடியாது. அதனால் கார்பரரேட் நிறுவனங்கள் கேட்கும் அடிமாட்டு விலைக்கே விற்கவேண்டிய அவல நிலை ஏற்படும். எனவே திருத்தச் சட்டத்தால் உழவர்களுக்கு வாழ்வு கிடைக்கும் என்பது பச்சைப் பொய். கார்பரேட்களிடம் விவசாயிகளை அடகு வைப்பதே மத்திய அரசின் திட்டம்.” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.