வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. இப்புயல் காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கில் 500 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையிலிருந்து 520 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வந்த நிலையில் தற்பொழுது புயல் நகரும் வேகம் 12 கிலோமீட்டராக அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேகமாக நகரும் மாண்டஸ் புயல் நாளை இரவு மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் பொழுது 65 முதல் 75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளிக்காற்று 85 கிமீ வரை வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. 6 மாவட்டங்களில் நாளை இரவு அரசுப் பேருந்து இயக்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இரவு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் பேருந்து நிலையங்களில் அதிகமாக மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை இரவு புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.