கள்ளக்குறிச்சி வ.உ.சி நகர் பகுதியில் சட்டவிரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறியும் ஸ்கேன் இயந்திரம் வைத்து, பாலினம் கண்டறிந்து, கருக்கலைப்பு செய்து வருவதாக, தமிழ்நாடு மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், தருமபுரி சுகாதார இணை இயக்குனர் சுகந்தி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள், கள்ளக்குறிச்சி வ.உ.சி நகர் பகுதியில் திடீர் ரெய்டு செய்தனர்.
இதில் ஒரு வீட்டில் வைத்து பாலினம் கண்டறிந்து, கருக்கலைப்பு செய்யும் பணி செய்து வந்தது தெரிய வந்தது. இதனை ரஞ்சித்குமார், சந்திரன் செய்து வந்தனர். சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் இருந்து ரஞ்சித்குமார், சந்திரன் ஆகிய இருவரும் தப்பியோட முயன்ற நிலையில், அதில் ரஞ்சித்குமாரை சுகாதாரத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் ரஞ்சித்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்த பாலினம் கண்டறியும் இரண்டு ஸ்கேன் இயந்திரங்களையும், கருக்கலைப்பு செய்ய பயன்படுத்தப்படும் மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய சந்திரனை கள்ளக்குறிச்சி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வரும் சூழ்நிலையில் கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என கண்டறிந்து அதனை பெண் என்றால் கலைப்பது, முறையற்ற கர்ப்பத்தை கலைப்பது என சட்டவிரோத கருக்கலைப்பு மையமாக செயல்பட்டது வருகிறது. இதுபோல் தமிழ்நாட்டிலும் வேறு சில இடங்களிலும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவைகளை சுகாதாரத்துறை கண்டறிந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளன.