Skip to main content

"சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்" -கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

 

makkal needhi maiam party kamal hassan press meet at chennai

 

"சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன்" என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

 

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

 

அப்போது அவர் கூறியதாவது; "அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் ரஜினிகாந்துடன் தொடர்ந்து பேசி வருகிறேன். ரஜினியின் உடல்நலம் தொடர்பான அறிக்கையில் இடம் பெற்றிருந்த தகவல்கள் எனக்கு முன்கூட்டியே தெரியும். நாமே தீர்வு என்ற கொள்கையுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி செயல்பட்டு வருகிறது. கூட்டணி குறித்து பதில் சொல்லக்கூடிய காலம் இது இல்லை. மூன்றாவது அணி அமைந்துவிட்டது என்றுதான் சொல்கிறேன். நல்லவர்கள் மூன்றாவது அணிக்கு வர வேண்டும் என அழைக்கிறேன். 

 

நல்லவர்கள் வரும் போது அது மூன்றாவது அணியாக இருக்காது; முதல் அணியாக இருக்கும். நல்லவர்களுடன்தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும்; நல்லவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். ரஜினியின் உடல்நலம் முக்கியம்; அரசியல் கட்சி பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் போன்ற நல்ல கட்சிகளும் இருக்கின்றன.

 

makkal needhi maiam party kamal hassan press meet at chennai

 

நேர்மை என்பது தான் சட்டமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை. 100 முதல் 160 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தாக்கத்தை ஏற்படுத்தும். சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை தற்போது வெளியிட இயலாது. சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறோம். சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். மக்கள் நீதி மய்யத்தின் குரல் தமிழக சட்டமன்றத்தில் ஒலிக்கும். மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித்துள்ளனர். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது வேட்பு மனுத்தாக்கலின் போது தெரியும்.

 

வாய்ப்பு கிடைக்கும் போது கட்சியின் கொள்கைகள், சின்னத்தை மேடைகளில் பிரபலப்படுத்துவது வழக்கம். வேல் யாத்திரை என்பதை விட இளைஞர்களுக்கு வேலை தேவை என்பது தான் முக்கியம். சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கலாம். நான் நாத்திகவாதி இல்லை; நான் பகுத்தறிவாதி. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 8 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது.

 

பண்டிகைகளின் போது மட்டுமல்ல தேர்தலின் போதும் மக்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். கரோனாவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு ஏன் பண உதவி செய்யவில்லை. சகாயம் போன்ற நல்லவர்களை எப்போதும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வரவேற்கிறோம். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வருமாறு ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்.

 

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நவம்பர் 26- ஆம் தேதி முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறேன். நவம்பர் 26- ஆம் தேதி திருச்சியிலும், நவம்பர் 27- ஆம் தேதி மதுரையிலும், டிசம்பர் 12- ஆம் தேதி கோவையிலும், டிசம்பர் 13- ஆம் தேதி சேலத்திலும் சுற்றுப்பயணம் செய்கிறேன்." இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்