
முன்னோர்களின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாளே மகாளய பட்சம் எனப்படும். நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது. அப்போது நாம் அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளையோ, பழ வகைகளையோ தானம் செய்தால் அவர்களின் தாகமும், பசியும் தீர்ந்து மகிழ்வுடன் திரும்பி செல்வார்கள் என்பது நம்பிக்கை.
சாதாரண அமாவாசையின்போது செய்யப்படும் தர்ப்பணமானது நமது ரத்த சம்பந்தமுள்ள முன்னோரை அதாவது நம் குல முன்னோரை மட்டுமே சேரும். ஆனால், மகாளய அமாவாசையின்போது செய்யப்படும் படையல், தானம் போன்றவை நமக்குப் பிரியமானவரகளாக இருந்து இறைவனடி சேர்ந்த அனைவரையும் சென்று சேரும் என்று கூறப்படுகிறது. இவர்களையே காருண்ய பித்ருக்கள் என்று சொல்கிறோம். அதனாலேயே மற்ற அமாவாசைகளைவிட மகாளய அமாவாசை மிகவும் ஏற்றம் பெற்றது என்று நம்பப்படுகிறது.
இந்த அமாவாசையில் பொதுவாக ஆற்றங்கரைகளில் நீராடி ஈரத்துணியுடன் மந்திரம் சொல்லி, சடங்கு, சாங்கியங்கள் செய்வார்கள். காரணம், முன்னோர்களின் பாவம் தற்போது குடும்பத்திற்குள் தொடர்ந்து வராமல் இருக்க தீட்டு கழித்து, முன்னோர்களுக்கு எல்லு சாதம் வைத்து, அதைக் காகத்திற்கு படைப்பார்கள். இந்த மகாளய அமாவாசை அன்று திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் வழக்கமாக தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கானவர்கள் குவிந்து வழிபாடு செய்வார்கள். ஆனால், கரோனா காலம் என்பதால் இன்று (06.10.2021) மகாளய அமாவாசை தர்ப்பணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு யாரும் தடையை மீறி தர்ப்பணம் செய்யக்கூடாது என்பதால் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியில் மந்திரம் ஓதுபவர்கள், தர்ப்பணம் கொடுக்க வருபவர்கள் அதற்குத் தேவையான பொருட்கள் வாங்கித் தருவார்கள். ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் ஒரே விதமான பொருட்களை வாங்கித் தருவதால் அது பெரும்பாலம் உபயோகப்படுத்த முடியாமல் போகும். அதனால், அதில் பெரும்பாலான பொருட்கள் எந்தக் கடைகளில் இருந்து வாங்கப்படுகிறதோ, அதே கடைக்கு மீண்டும் கொண்டு சேர்க்கப்படும்.
அதேபோல், தர்ப்பணம் செய்யும்போது பயன்படுத்தும் துணிகள், வேட்டி, சட்டை, புடவை உள்ளிட்டவற்றை சேகரித்து அதை மீண்டும் விற்பனை செய்வதும் நடக்கும். தர்ப்பணத்திற்காக வாங்கப்படும் காய்கறிகள், அவுத்தி கீரை உள்ளிட்டவை படைக்கப்பட்டு, மீதம் உள்ளதை சேகரித்து அதை இரவு நேரங்களில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் நபர்கள் வாங்கிவிற்றும் வருவர். இப்படி ஒரு பெரிய வருமானம் ஈட்டக்கூடிய இடமாக மாறிய இந்த அம்மா மண்டபம், இன்று கரோனா காரணமாக கலையிழந்து காணப்படுகிறது.
பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தங்களால் முடிந்த இடங்களில், ஆங்காங்கே கிடைத்த இடங்களில் தங்களுடைய மூதாதையா்களுக்குத் தர்ப்பணம் கொடுத்துவருகின்றனா். இந்த மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்க திருச்சி மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து அதிகப்படியான மக்கள் இந்த அம்மா மண்டபத்திற்கு வருவார்கள். இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள், தங்களுடைய ஊர்களிலேயே ஆறு, குளம், கால்வாய்கள் என்று தண்ணீர் உள்ள இடங்களில் தர்ப்பணம் செய்கின்றனர். இந்தத் தடையால், பலருடைய வருமானம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.