தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி என 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சூரக்குளம் என்ற பகுதியை சேர்ந்த வேல்முருகன் (வயது 29) என்பவரது மனைவி ஆர்த்தி (வயது 19). இவர் கடந்த 2021ம் ஆண்டு தனது 11 ஆம் வகுப்பை முடித்து இருந்தார். இருப்பினும் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது படிப்பை தொடர முடியாத நிலையில் கடந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதி இருந்தார்.
கடந்த 8 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஆர்த்தி, தனது தேர்வு முடிவுகளை இணையத்தில் கண்டு அதிர்ச்சியடைந்தார். காரணம் வெளியான அவரது தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண்கள் பெற்றதாகக் காட்டியுள்ளது. அதாவது தமிழ் தேர்வின் மொத்த மதிப்பெண்ணான 100-ஐ விட கூடுதலாக 38 மதிப்பெண்கள் பெற்றதாகக் காட்டியுள்ளது. அது மட்டுமின்றி ஆங்கிலப் பாடத்தில் 92 மதிப்பெண்களும், கணக்கு பாடத்தில் 56 மதிப்பெண்களும், இயற்பியல் பாடத்தில் 75 மதிப்பெண்களும், வேதியியல் பாடத்தில் 71 மதிப்பெண்கள், உயிரியல் பாடத்தில் 82 மதிப்பெண்கள் என மொத்தம் 514 மதிப்பெண்கள் பெற்றதாக முடிவுகள் காட்டிய நிலையில் கணக்கு, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என நான்கு பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றும், மாணவி இந்த நான்கு பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை என தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இது குறித்து தேர்வு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சரியான முறையில் தனது தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.