தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, மனுசாஸ்திரம் குறித்து அவதூறாகப் பேசியதாக பா.ஜ.க.வினரும், பல்வேறு இந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஆ.ராசாவின் பேச்சு குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்ப ஆரம்பித்தார். அப்பொழுது அருகில் அமர்ந்திருந்தவரிடம் மதுரை ஆதீனம் 'ஆரம்பிச்சுட்டாங்க...' என்று சைலன்ட் மோடில் சொன்னார். 'ஒரு இந்துவாக ஆ.ராசாவின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்' என செய்தியாளர் கேள்வியை முடிக்க, அதற்கு பதிலளித்த மதுரை ஆதீனம், ''நான் எதும் சொல்றதுக்கில்ல... நீங்க வம்ப விலைக்கு வாங்குறீங்க... டிவி வேண்டாம் டிவி வேண்டாம் நீங்க எடுத்துட்டுபோங்க ( பேட்டி வேண்டாம் என்பதை டிவி வேண்டாம் என வெளிப்படுத்தினார்) நான் உங்கள கூப்டேனா... எப்படி பேசுறாங்க பாருங்க...'' என ஆதீனம் அங்கிருந்தவர்களிடம் முறையிட்டார். பின்னர் ஆதினம் சார்பில் அங்கு இருந்தவர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் உடனே பேட்டியை முடித்துக்கொண்டு எழுந்து சென்றார் மதுரை ஆதீனம். இதனால் அந்த இடம் சற்று பரபரப்பானது.