திண்டுக்கல்லில் நேற்று இரவு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் குழந்தை உள்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கச் சொல்லி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு விட்டதின் பேரில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கர பாணி ஆகியோர் நேரடியாகவே மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அனைத்து உதவிகளையும் செய்யச் சொல்லி உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோருடன் எம்.எல்.ஏக்கள் ஐ.பி. செந்தில்குமார், காந்தி ராஜன் ஆகியோரும் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ 3 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் தீ விபத்து நடந்திருக்கிறது. தீ விபத்தினால் எந்த நோயாளிகளுக்கும் பெருமளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒருவருக்கு மட்டும் 10 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. யாருடைய அறிவுறுத்தலும் இன்றி ஆறு பேர் தாங்களாகவே லிப்டில் பயணம் செய்துள்ளனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 ஆண்கள், 2 பெண்கள் ஒரு குழந்தைகள் 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் இருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்குப் புகை மூட்டம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வருவாய் துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்களால் ஏராளமானோர் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் கேள்விப்பட்டவுடன் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போர்க்கள அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த பெரும்பாலானோர் வீடு திரும்பி உள்ளனர். இதில் 3 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 41 பேரில் ஆறு பேர் மரணம் அடைந்தது போக, மீதமுள்ள 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்கு பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறதோ, அதே சிகிச்சை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் குடும்பகளுக்கு ரூ.3லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து முதல்வர் வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை சம்பந்தப்பட்டவர்களிடம் இன்று வழங்கினோம். பலத்த காயம் அடைந்த நான்கு பேருக்கு தலா ஒரு லட்சத்திற்க்கான காசோலை வழங்கப்பட்டது. லேசான காயம் அடைந்த 31 பேருக்கு ரூ.50 ஆயிரம் விதம் வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 41 பேருக்கு 37 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.
தீ விபத்து குறித்து காவல்துறையினர் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தனியார் மருத்துவமனைக்கு எந்தந்த வசதிகள் இருக்க வேண்டுமோ அது குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். காவல் துறையினர் முழு அறிக்கை கொடுத்தவுடன் எந்த மாதிரியான விதிமீறல்கள் உள்ளது என ஆய்வு செய்யப்படும். தனியார் மருத்துவமனைக்கு உள்ள விதிகளைப் பின்பற்றாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.