ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இரண்டாம் முறையாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், கடந்த 10 ஆம் தேதி ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து சில மணி நேரத்தில் அந்தச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று (11 ஆம் தேதி) ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன், “ஆளுநரின் விவகாரங்களை விமர்சிப்பது முறையான விஷயம் கிடையாது. அவர் சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்திருக்கிறார். ஒரு மசோதாவை திருப்பி அனுப்புவது அவர் கொண்ட உரிமை. அதனையே இரண்டாம் முறை அனுப்பும்போது அதனை அவர் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அது சட்ட ரீதியானது. இதனை இன்னும் கொஞ்சம் வேகமாக செய்திருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இத்தனை நாட்கள் வைத்து, இத்தனை இறப்புகளுக்கு அவரை குற்றம் சாட்டக்கூடிய நிலைக்கு வந்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து. நல்ல சட்டங்களுக்கு ஒப்புதல் தரலாம். தற்போது கூட்டுறவு சங்கத் தேர்தலை நிறுத்தி வைத்திருக்கிறார். அது நியாயம்; தர்மம். ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை முதலில் கொண்டு வந்ததே நாங்கள் தான். அதற்கு தற்போதும் நாங்கள் ஆதரவு கொடுத்திருக்கிறோம்” என்றார்.
அரசிதழில் வெளியான ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்
தொடர்ந்து செய்தியாளர்கள், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு எப்படி செயல்படுகிறார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மாஃபா பாண்டியராஜன், “இது அதர்மமான போக்கு; இதில் சட்ட ரீதியான நடவடிக்கையை அவர் எடுக்கவில்லை. உச்சநீதிமன்றமே அங்கீகரித்த அதிமுக பொதுச்செயலாளர் ஒரு முடிவை எடுத்திருக்கும்போது, அதற்கு மாறுதலாக சட்டமன்றத்தில் ஒரு முடிவை எடுப்பது தவறான காரியம். எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் வெகு விரைவில் அமர்ந்தே ஆக வேண்டும்” என்று தெரிவித்தார்.