Skip to main content

பரபரப்புகளுக்கு நடுவே நாளை உள்ளாட்சி தேர்தல்...!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

மறுவரையறை செய்யப்படாத மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களுக்கு வருகிற டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

 

Local body election begin tomorrow

 

 

ஏழு ஒன்றியங்களைக் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கிராமங்களில் பரபரக்க தொடங்கியுள்ளது. ஊராட்சித் தலைவர் மற்றும் அதன் வார்டு கவுன்சிலர்களுக்கு கட்சி சின்னம் கிடையாது. வரையறை செய்த படி பொது சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். ஆனால் ஒன்றிய கவுன்சிலர், ஒன்றியத் தலைவர் மாவட்டக் கவுன்சிலர் தேர்வுகளுக்கு மட்டும் கட்சியின் சின்னம் ஒதுக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளின் ஒதுக்கீடு தவிர்த்து தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நிர்வாகத்தைக் கைப்பற்ற பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடுகிறது.

கிழக்கு மேற்கு என இரண்டு யூனியன்களைக் கொண்ட ஒட்டப்பிடாரம் யூனியனில் அ.தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டாலும், தி.மு.க. தன் கூட்டணியான ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு சீட் பகிர்ந்தளித்துவிட்டு மேற்கு ஒன்றியத்தில் 10 இடங்களில் களம் கண்டுள்ளது. இதே போன்றதொரு பங்கீடுதான் 9 வார்டுகளைக் கொண்ட ஒட்டப்பிடாரத்தின் கிழக்கு ஒன்றியத்திலும் நடைபெற்று உள்ளது. தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களோ சேர்மன் பதவியைப் பிடிப்பதற்காக தேவையான கவுன்சிலர்களை வளைக்க வியூகமெடுத்துள்ளனர்.

 

Local body election begin tomorrow

 



அதே சமயம் இலைத்தரப்பு விளாத்திகுளம், புதூர், சாத்தான்குளம் ஒன்றியங்களின் தலைவர் பதவியைப் பிடிக்கும் வகையில் கவுன்சிலராக வேண்டுமென்பதற்காக, மாமனார், மருமகள், கணவன் இல்லையென்றால் மனைவி என இரட்டை வேட்பாளர்களை டெக்னிக்காகவே களமிறக்கியுள்ளது. இதனால் தேர்தல்களம் அனல் பறக்கிறது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அடுத்தகட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ஆம் தேதியன்று நடக்கிறது.

தேர்தல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறையில் 14 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவைகளில் பெரும்பான்மையான புகார்கள் சுவர் விளம்பரம் குறித்தவைதான். முதற்கட்ட தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு 25ம் தேதி மாலை 5 மணி முதல் வரும் 27ம் தேதி வரையிலும், 30ம் தேதி நடைபெறும் 2ம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு 28ம் தேதி மாலை 5 மணிமுதல் 30ம் தேதி மாலை 5 மணிவரையிலும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜன 2ம் தேதியும் ஊரகப் பகுதிகளில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்