Local body by-election: 86 percent voting in Salem Union!

சேலம் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில், சேலம் ஒன்றியம் 8- வது வார்டில் 86 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

Advertisment

சேலம் மாவட்டத்தில் இறப்பு மற்றும் பதவி விலகல் காரணமாக 30.4.2022ம் தேதி வரை ஏற்பட்டுள்ள ஒரு ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு கவுன்சிலர் மற்றும் 11 ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், வாழப்பாடி ஒன்றியத்தில் நீர்முள்ளிக்குட்டை 1, சங்ககிரி ஒன்றியத்தில் புள்ளாக்கவுண்டம்பட்டி 1, மேச்சேரி ஒன்றியத்தில் தெத்திகிரிப்பட்டி 1, அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் மின்னாம்பள்ளி 1, பூவனூர் 1 ஆகிய 6 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

Advertisment

இதையடுத்து, சேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 8- வது வார்டு கவுன்சிலர் பதவி, 5 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 6 பதவிகளுக்கு இடைத்தேர்தல் சனிக்கிழமை (ஜூலை 9) நடந்தது. இதற்காக மொத்தம் 15 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

Local body by-election: 86 percent voting in Salem Union!

காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 05.00 மணி வரையில் நடந்தது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு மட்டும் மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை தனியாக நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வாக்குச்சாவடியிலும் கரோனா நோயாளிகள் வந்து வாக்களிக்கவில்லை.

சேலம் ஒன்றியம் 8- வது வார்டில் மட்டும் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வார்டில் மொத்தம் 7683 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 6,598 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இந்த வார்டில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். தி.மு.க. சார்பில் ஆண்டிப்பட்டி கிளை செயலாளர் முருகன் போட்டியிட்டார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த வெங்கடேஷ்வரன் சுயேட்சையாக களமிறங்கினார். இவர்கள் தவிர மேலும் 14 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், இவர்கள் இருவருக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவியது.

இரு வேட்பாளர்களுமே பங்காளிகள் உறவுமுறை ஆவதோடு, தேர்தல் நடக்கும் ஆண்டிப்பட்டி, பனங்காடு, இனாம் வேடுகாத்தாம்பட்டி ஆகிய கிராமங்களில் இவர்களின் உறவுக்காரர்களே அதிகமாக உள்ளனர். அதனால் ஆரம்பத்தில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.இந்த வார்டில் மொத்தம் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளனர். ஆண்டிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி 77 (அ.வா) வாக்குச்சாவடியில் மட்டும் அதிகபட்சமாக 90 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

அதேபோல், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடந்த தலைவாசல் ஒன்றியத்தில் 74 சதவீதம், மேச்சேரியில் 80 சதவீதம், காடையாம்பட்டியில் 72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. மிகக்குறைந்தபட்சமாக தலைவாசல் ஒன்றியத்தில் 184ம் எண் வாக்குச்சாவடியில் மட்டும் 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.

Local body by-election: 86 percent voting in Salem Union!

சேலம் ஒன்றியம், 8- வது வார்டில் நான்கு வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு இருந்தன. இதையடுத்து அங்கு 4 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நல்வாய்ப்பாக தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

வரும் 12- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.