காதல் விவகாரத்தில் பேன்சி ஸ்டோரில் வேலைக்கு வந்த சிறுமி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை டவுன் கீழ ரத வீதியில் 'ராஜா டாய்ஸ் அண்ட் ஃபேன்சி' என்ற பேன்சி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் திருப்பணிகரைசல் குளம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற சிறுமி வேலை செய்து வந்தார். நேற்று காந்திமதி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள பேன்சி கடைக்கான குடோனில் இருந்து பொருட்களை எடுப்பதற்கு சந்தியா சென்றுள்ளார். ஆனால் குடோனுக்கு சென்ற சந்தியா நீண்ட நேரமாக திரும்பாததால் கடையில் இருப்பவர்கள் சந்தேகமடைந்தனர்.
கடையில் வேலை பார்க்கும் சக தோழிகள் குடோனுக்கு சென்று பார்த்தபோது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சந்தியா உயிரிழந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக தோழிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கொலை சம்பவம் குறித்து விசாரித்தனர். விசாரணையில் அதே கடையில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுவன் சந்தியாவை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்ததால் சந்தியா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவனிடம் பேசுவதை சந்தியா நிறுத்தியுள்ளார். தொடர்ந்து சந்தியாவின் சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த சிறுவன் தன்னிடம் சந்தியாவை பேச சொல்லுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் இனிமேல் சந்தியா உன்னிடம் பேச மாட்டார் என எச்சரித்து விட்டு போனை துண்டித்து விட்டார்.
அதேநேரம் கடையின் உரிமையாளருக்கும் இந்த விவகாரம் தெரிய வர, வேலைக்கு வர வேண்டாம் என அந்த சிறுவனை கடையின் உரிமையாளர் நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சிறுவன் கத்தியுடன் சுற்றியுள்ளார். இந்நிலையில் சந்தியா குடோனுக்கு செல்வதை அறிந்து பின் தொடர்ந்து சென்ற சிறுவன் தன்னிடம் பேசும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அப்பொழுது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கையில் வைத்திருந்த கத்தியால் சந்தியாவை கொலை செய்துவிட்டு தப்பியது தெரிய வந்தது.
தனது மகள் கடைக்கு வேலைக்கு சென்ற இடத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது சந்தியாவின் வீட்டாருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்த அவர்கள் அனைவரும் கடைக்கு முன்பே வந்து கதறி அழுத காட்சிகள் கண்ணீரை வரவழைத்தது. இந்த கொலைக்கு நீதி வேண்டும் என உறவினர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் நெல்லை டவுன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.