Skip to main content

அதிகாலை 5 மணிக்கே ஸ்டார்ட்... கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மது விற்பனை கன ஜோர்

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

Liquor sale at 5AM in Namakkal
கோப்புப் படம் 

 

நாமக்கல் அருகே, அதிகாலை கோயில்களில் சுப்ரபாதம் பாட்டு போடும் போதில் இருந்தே கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மது விற்பனையைத் தொடங்கி விடுவதாக பிடிபட்ட குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.

 

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பாலப்பட்டி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பரமத்தி வேலூர் காவல் நிலைய ஆய்வாளர் வீரம்மாள் மற்றும் காவலர்கள், பரமத்தி வேலூர் பழைய புறவழிச்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்தனர். 

 

விசாரணையில் அந்த வாலிபர், மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்ததோடு, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 103 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, பரமத்தி வேலூர் நான்கு சாலை, சிவா திரையரங்க பகுதி ஆகிய இடங்களில் அனுமதியின்றி மதுபானங்களை விற்றதாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த சரவணன் என்கிற செந்தாமரைக்கண்ணன் (25) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 


இதையடுத்து, எல்லை மேடு பகுதியில் நடந்த சோதனையில் டாஸ்மாக் கடை அருகே கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை விற்பனை செய்ததாக பாலப்பட்டியைச் சேர்ந்த நிஷாந்த் (24) என்பவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 74 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
 

டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்பும், இரவு பத்து மணிக்கு மேலும் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதிகாலை 5 மணிக்கு கோயில்களில் சுப்ரபாதம் பாட்டு போடும்போதே இவர்களும் சந்துக்கடைகளில் மதுபானங்களை விற்கத் தொடங்கி விடுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

இவர்களுடன் தொடர்பில் உள்ள கும்பல் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.