Liquor Licensing Cancellation Liquor Department Action Order

சென்னை மாநகரில் விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்கள் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும் மதுவிலக்குத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு) ஹையத் ரீஜன்சி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் எப்.எல்.3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன. அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை விநியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்ட விவரங்கள் தெரியவந்தன.

இதனால் சென்னை மாநகரில் விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த எப்.எல்.3 உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அந்த மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.