மிக்ஜாம் புயல் காரணமாக சில இடங்களில் நீர் தேங்கி நிற்பதால் சென்னையில் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வில் ஈடுபட்டார். ஆய்வுக்கு பிறகு நேற்று அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட எக்ஸ் வலைத்தள பதிவில், 'அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் ஆவின் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன். பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பதற்றம் அடைந்து அன்றாட தேவையை விட அதிக பால் பாக்கெட்டுகளை வாங்கி மக்கள் இருப்பு வைக்க வேண்டாம். சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் பால் விற்பனையகங்களில் நிலைமை சீரடைந்து வருகிறது. அம்பத்தூர் பால் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால் இந்த காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம்' என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் கூடுதல் விலைக்கு பால் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. ஒரு லிட்டர் பால் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என அவர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இன்று, ஆவின் பாலை மக்களுக்கு வழங்காமல் கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரித்துள்ளார். 'தேவைக்கேற்ப மொத்த, சில்லறை விற்பனையாளர்களுக்கு பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு பால் விற்றாலோ அல்லது கள்ள சந்தையில் விற்றாலோ முகவரின் உரிமம் ரத்து செய்யப்படும். ஒரு சில இடங்களை தவிர சென்னையில் பால் விநியோகம் சீராக உள்ளது' என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.