அண்மையில் தமிழக அரசு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தி இருந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில சர்ச்சைகள் எழுந்திருந்தது. குறிப்பாக விசிக கட்சியின் எம்பி ரவிக்குமார் சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக மாணவர்கள் உறுதிமொழி ஏற்க பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1967 பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும் என உறுதிமொழி ஏற்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள இந்த சுற்றறிக்கையில் தமிழக கல்வித்துறையும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து 10 உறுதிமொழிகளை கொடுத்துள்ளது.
அதில் களிமண், கிழங்கு மாவு போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களில் செய்யப்படும் விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும்; சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும்; மேல் பூச்சுக்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீர் சார்ந்த, இயற்கையால் மக்கக்கூடிய, நச்சுத்தன்மையற்ற, இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும்; சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்களை பயன்படுத்த வேண்டும்; ஒருமுறை பயன்படுத்திய அலங்கார துணிகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும்; ஏற்படும் குப்பைகளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும்; அரசு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைப்போம் மற்ற இடங்களில் கரைக்க மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் 'கொண்டாடுவோம் கொண்டாடுவோம் விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், இதுகுறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இதுபோன்ற உறுதிமொழி அறிக்கைகள் வெளியானது இல்லை. இந்த ஆண்டு முதல்முறையாக இந்த அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது சில சர்ச்சைகளையும் உருவாகியுள்ளது.
சில கல்வியாளர்கள் இந்த சுற்றறிக்கைக்கு எதிர்ப்பும் மற்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக ஆசிரியர்கள் கூட்டணி அமைப்பின் தலைவர் அண்ணாமலை இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ''சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் உறுதிமொழி எடுப்பது என்பது வழக்கம். ஆனால் சுதந்திரம் அடைந்ததற்கு பின் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம் கொண்டாடுவோம் மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம் என்று பள்ளிகளில் கொண்டாட சொல்லி வலியுறுத்தப்பட்டது இல்லை. தமிழக அரசு இப்படியொரு சுற்றறிக்கை வெளியிட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மதரீதியான பிரச்சனையை ஏற்படுத்தும்'' என தெரிவித்துள்ளார்.