கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் கோவை காந்திபுரத்தில் சரண கோச பேரணி போராட்டம் நடத்தினர். நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருமுருகனார், மாநில இளைஞரணி செயலாளர் காலனி பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவை காந்திபுரம் திருவள்ளூவர் பஸ் நிலையத்தில் இருந்து சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் வரை 100 பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின் போது மழை கொட்டியது. மழையையும் பொருட்படுத்தாமல் அனைவரும் ஊர்வலமாக சரணம் கோஷமிட்டப்படி சென்றனர். ஊர்வலம் முடிவில் மாநில செயலாளர் சங்கர் கூறுகையில், சபரிமலைக்கு ஆண்டு, ஆண்டுகாலமாக பின்பற்றி வந்த முறையே பின்பற்ற வேண்டும். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை பரிசீலினை செய்ய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஜெய்கிருஷ்ணன், செந்தில் மயில், முருகன், சிம்பு சிவகுமார், குமார், அழகர், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.