Skip to main content

அரசு கொடுக்கும் பட்டா நிலத்தில் எங்களுக்கு சமாதி கட்டி விடுங்கள்!; அதிகாரிகளிடம் விவசாயிகள் பாய்ச்சல்!!

Published on 06/08/2018 | Edited on 06/08/2018
far


எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வீட்டுமனைப் பட்டா நிலத்தில், விவசாயிகளை குடும்பத்தோடு வைத்து சமாதி கட்டிவிடுங்கள் என்று அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் மீண்டும் குமுறலை வெளிப்படுத்தினர்.


சேலத்தை அடுத்த குள்ளம்பட்டி கிராமத்தில் நேற்று காலை இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள், சேலம் - சென்னை இடையில் அமையவுள்ள எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் உண்ணாநோன்பு இருக்கத் தொடங்கினர்.

 

ff


வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி சூரியமூர்த்தி தலைமையிலான காரிப்பட்டி போலீசார் உண்ணாநோன்பு இருக்க முயன்றதாக 6 பெண்கள் உள்பட 15 விவசாயிகளை கைது செய்தனர். கோயிலில் வழிபாடு என்று சொல்லிவிட்டு திடீரென்று உண்ணாவிரத போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராகிவிட்டதாக காவல்துறை, வருவாய்த்துறை வட்டாரத்தில் தகவல்கள் பறந்தன. 


இதனால் அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி விவசாயிகளிடம் இன்று (ஆகஸ்ட் 6, 2018) நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மின்னாம்பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார்கள் அன்பரசி, பொன்னுசாமி, ஆர்.ஐ., சரஸ்வதி, வி.ஏ.ஓ., ஆனந்தவேலு ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். நேற்று கைது செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 


வருவாய்த்துறை அதிகாரிகள் பேசுகையில், ''கோயிலில் உண்ணாவிரதம் இருப்பதற்கு காவல்துறையில் முன்கூட்டியே பர்மிஷன் வாங்கியிருக்கலாமே...? எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் வீட்டை இழக்கும் விவசாயிகளுக்கு மாற்று இடத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்குகிறோம். வழக்கமான இழப்பீடு மட்டுமின்றி முதியோர் ஓய்வூதியத்தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். உங்களுக்கு வேறு என்னதான் வேண்டும்? ஏன் இப்படி செய்கிறீர்கள்? 


அயோத்தியாப்பட்டணம் அலகில் அதிக விவசாயிகள் எட்டு வழிச்சாலைக்கு நிலம் தர விருப்பம் இல்லை என்றுதான் ஆட்சேபனை மனு கொடுத்துள்ளனர். இத்திட்டத்தை ஆதரிக்காத பல விவசாயிகள் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் நீங்கள்தான் திட்டத்தையும் எதிர்க்கிறீர்கள்; அதிகாரிகளையும் எதிர்க்கிறீர்கள்,'' என்றனர்.


இதற்கு பதில் அளித்த விவசாயிகள் வீரமணி, பன்னீர்செல்வம், அமுதா, மற்றொரு மணிகண்டன், சேகர், முத்து, செல்வி ஆகியோர் கூறுகையில், ''எங்கள் ஊரில் 17 பேருக்குச் சொந்தமான தனியார் பட்டா நிலத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் சாமி கும்பிடவும், நோன்பு இருக்கவும் காவல்துறையில் அனுமதி பெற வேண்டிய தேவையில்லை. எங்களை அவர்கள்தான் மிரட்டி கைது செய்துள்ளனர்.


இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்தக் கோயில் திடலில் எங்களது போராட்டம் தொடரும். யாருக்காகவும் பின்வாங்க மாட்டோம். நிலத்தைக் கொடுத்தால் மாற்று இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதாகச் சொல்கிறீர்கள். அந்த இடத்தில் எங்களுக்கு குடும்பத்தோடு சமாதி கட்டி விடுங்கள். இப்போது இருக்கும் இடத்தில் இருந்து எங்களுடைய அங்காளி பங்காளிகளை எல்லாம் விட்டுவிட்டு நாடுகடத்தப் பார்க்கிறீர்கள். 


வற்றாத கிணறு, வளமான நிலத்தை விட்டுவிட்டு நாங்கள் எங்கே போவோம்? அரசாங்கம் கொடுக்கும் இழப்பீடு தொகையை வைத்துக்கொண்டு இதுபோன்ற ஒரு நிலத்தை இந்த ஊரில் வேறு எங்காவது வாங்க முடியுமா?. இந்த நிலத்தை நம்பித்தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். அவர்களுக்கு கல்யாணம் காட்சி என்று செய்ய வேண்டியிருக்கிறது. 

பல இடங்களில் விளை நிலத்தின் நடுவில் சாலை வருகிறது. இதனால் எஞ்சியுள்ள நிலத்தில் எப்படி விவசாயம் செய்ய முடியும்?. இந்தத் திட்டத்தால் சாலையைச் சுற்றியுள்ள நிலத்திலும் விளைச்சல் பாதிக்கும் அபாயம் உள்ளது. எங்களுக்கு எட்டு வழிச்சாலை வேண்டாம். எங்களுக்கு எங்கள் நிலம்தான் வேண்டும்,'' என ஒரே குரலில் கூறினர்.


அதற்கு அதிகாரிகள், ''இது அரசாங்க திட்டம். அதை செயல்படுத்துவதுதான் எங்களுடைய பணி. உங்களுக்கு வேறு ஏதாவது சலுகைகள் வேண்டுமானால் கேட்கலாம். உங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்,'' என்று கூறிவிட்டு அதிகாரிகள் கூட்டத்தை முடித்து வைத்தனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நெருங்கி வரும் விநாயகர் சதுர்த்தி - மனுகொடுத்த களிமண் மண்பாண்ட சங்கத்தினர்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 'Plaster of Paris Ganesha idols should be banned'- clay potters petition

விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கான பணிகள் தற்போது துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு முடிவடைந்து சிலைகளுக்கு வண்ணம் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சில ஆண்டுகளாகவே இரசாயனம் கலந்த பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்  உள்ளிட்ட பொருட்கள் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க அரசு தடை விதித்ததோடு, விநாயகர் சிலை தயாரிப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு வெளியிட்டு இருந்தது. அதன்படி பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிலைகள் உள்ள இடங்கள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து குடோன்களை மூடிய சம்பவங்களும் நிகழ்த்திருந்தது.

இந்நிலையில் வடமாநிலத்தவர் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் சிலை தயாரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என சேலத்தில் களிமண் மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

குலாலர் மண்பாண்டம், களிமண் பேப்பர் கூழ் விநாயகர் சிலை பொம்மைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளுடன் மனு அளித்தனர். மேலும் சிலை தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளை விரைவாக அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.

Next Story

அதிமுக பிரமுகர் படுகொலை; 9 பேர் கைது - சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
9 people arrested in Salem AIADMK executive Shanmugam case

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம்(60). இவர், கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மாநகராட்சியின் மண்டலக் குழு தலைவராக இருந்துள்ளார். தற்போது, இவர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியின் அதிமுக செயலாளராக இருந்து வந்தார். சமீபகாலமாக சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து அடிக்கடி புதிய புதிய எண்ணிலிருந்து கால் வந்துள்ளது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில் சண்முகம், சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதிக்கு, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், சண்முகத்தை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் அன்னதானப்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் அதிமுகவினர் அந்தப் பகுதியில் ஒன்று கூடியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி துடித்து கண்ணீர் விட்டனர். மேலும் இறந்துபோன சண்முகத்தின் உறவினர்கள் கொலை செய்த நபர்களை கைது செய்யும் வரையிலும், உடலை வாங்கமாட்டோம் என அரசு மருத்துவமனையிலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் உறவினர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அதிமுகவினருக்கும் போலீஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், மாநகர் காவல் துணை ஆணையர் மதிவாணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திலிருந்து உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை, சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன் இவர், சந்துக்கடை வியாபாரம் குறித்தும் லாட்டரி விற்பனை குறித்தும் போலீசாருக்கு அடிக்கடி தகவல் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “நாங்கள் ஏற்கனவே சொல்வதுபடி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் காணப்படுகிறது. அதற்கு அதிமுக தொண்டர் பலியாகி இருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட கொலையாளிகளை கைது செய்யவேண்டும். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் " எனத் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், சண்முகம் கொலை வழக்கில் சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி எனச் சொல்லப்படும் சதீஷ், அருண்குமார், முருகன் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில்.. திமுகவை சேர்ந்த சதீஷ், கடந்த 2 ஆண்டுகளாக தாதகாப்பட்டியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை செய்து வந்தாரென கூறப்படுகிறது. இதன் காரணமாக சண்முகத்திற்கும் சதீஷ்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சண்முகத்தின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான், சண்முகத்தை சதீஷ் கூலிப்படைகளை ஏவி வெட்டி படுகொலை செய்துள்ளதாகச் சண்முகத்தின் மனைவியும் குடும்ப உறுப்பினர்களும் தெரிவித்த நிலையில், தற்போது சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே கடலூரில் அதிமுக நிர்வாகி ஒருவர் திருட்டு ஆடுகள் வாங்கியதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது சேலத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் சாலையிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.