தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ளது கடையம். அங்குள்ள மலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை செந்நாய், மரநாய், காட்டெருமை யானை போன்றவைகள் வசித்து வந்தாலும், அவ்வப்போது தண்ணீருக்காக தரையிறங்கும் வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியும், இரைக்காக கால்நடைகளை வேட்டையாடி வருவதும் உண்டு. அவைகளைப் பொறி வைத்துப் பிடிக்கிற வனத்துறையினர் அவ்வப்போது விலங்குகளை வனப்பகுதியில் விட்டலும், அவைகள் மீண்டும் மீண்டும் கிராமப் பயிர்களையும் கால்நடைகளையும் ஒரு வழி பண்ணுவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் கடையம் பக்கம் இருக்கும் கடனாநதி அணை அருகே உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தின் முருகன் என்பவர் தனது வெள்ளாடுகளை அருகிலுள்ள மலைக்காடுகளின் பக்கம் மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்பவர். வீடு திரும்பும் போது ஆடுகளை கணக்கெடுத்து அடைப்பார் நேற்று முன் தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுத் திரும்பும் போது கணக்கெடுத்ததில் ஒரு ஆடு காணாமல் போனது தெரிய வந்தது.
தோராயமாக பார்த்தாலும் ஒரு ஆட்டின் விலை 20 ஆயிரத்திற்கும் மேல் என்கிறார்கள். நேற்று காலையில் அவர் ஆட்டைத் தேடி வனப்பகுதிக்கும், ஊருக்கும் எல்லையிலுள்ள சோலார் மின்வேலி அருகே வரும்போது அங்குள்ள மரத்தில் வயிறு கிழிக்கப்பட்டு சதைகள் குதறிய நிலையில் ஆடு தொங்கிக் கொண்டிருந்தது கண்டு அலறியிருக்கிறார். வயிறு பெருத்து நிலையில் மரத்தின் கிளையில் தொங்க விடப்பட்ட அந்த ஆடு தூக்கிலிடப்பட்ட நிலையிலிருந்தது கண்டு பதறிய முருகன், உடனடியாக கடையம் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். கடையம் வனச்சரக பயிற்சி வனபாதுகாவலர் ராதையின் உத்தரவுபடி, வனவர் முருகசாமி, வனக்காப்பாளர் மணி, வனக்காவலர் முருகேஸ்வரி மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை ஆட்டை அடித்துக் குதறிக் கிழித்து நெஞ்சுப்பகுதியை மட்டும் தின்று விட்டு மீத உடலை மரத்திற்கு கொண்டு சென்று அதில் தொங்கவிட்டுப் பின் வனப் பகுதிக்குள் சென்றது தெரிய வந்திருக்கிறது. இந்த ஆட்டை தின்பதற்காக சிறுத்தை திரும்பவும் வரும் என்று எதிர்பார்த்து மூன்று வழியோரங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணித்து வருகின்றனர் வனத்துறையினர். சிறுத்தை கொன்று மரத்தில் தொங்க விட்ட ஆடு, ஆறு மாத நிறை சினையாகவுள்ளதாம். ஒரிரு நாட்களில் குட்டிகள் போடும் சூழலில் சிறுத்தை தன் அட்டகாசத்தை நடத்தியிருக்கிறது. ஆட்டை அடித்து தூக்கிச் சென்ற சிறுத்தை மரத்தில் ஏறும் போது அதன் காலின் நகங்கள் பட்ட மரத்தின் பகுதி அரிவாளால் பட்டையை உரித்தது போன்ற தடமிருந்தது. அதன் மூலம் அந்தச் சிறுத்தையின் பலமும் அதன் வளர்ச்சியும் தெரிய வருகிறது. என்கின்றனர் கிராம மக்கள்.
ஆட்டுக்கே இந்த கதி என்றால் தனி மனிதன் சிக்கினால் என்னவாகும் என்ற நடுக்கத்திலிருக்கிறது வனப் பகுதி கிராமங்கள்.