Skip to main content

‘மயிலாடுதுறையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?’ - பதற்றத்தில் மக்கள்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'Leopard movement again in Mayiladuthurai?' - People in tension

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த இரண்டாம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர். அந்தப் பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சிறுத்தையைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். இத்தகைய சூழலில் சிறுத்தை இடப்பெயர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதாவது மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் இடம் பெயர்ந்த சிறுத்தை குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சுற்றித் திரிவதாகத் தகவல்கள் வெளியானது. இந்தத் தகவலை அடுத்து  வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டனர். அந்தப் பகுதியில் சுமார் 15 இடங்களில்  தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூண்டுகளும் அமைக்கப்பட்டது. அதோடு கடந்தாண்டு நீலகிரி அருகே உள்ள மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த ஆட்கொல்லி புலியான டி23 புலியைப் பிடிப்பதில் மிகுந்த நேர்த்தியாகச் செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகிய இருவரும் மயிலாடுதுறை பகுதிக்கு வந்தனர். இவர்கள் வனத்துறையுடன் சேர்ந்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை நல்லத்துக்குடியில் சிறுத்தையைப் பார்த்ததாகத் தொழிலாளி ஒருவர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் தெர்மல் ட்ரோன் உதவியுடன் நள்ளிரவில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாகச் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் திருவாரூர் மாவட்ட வன அலுவலர் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கட்சி பதவியில் இருந்து நீக்கம்!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
BJP District President Agoram removed from party post

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி(21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர்.

மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதே சமயம் இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருவாரூர் மாவட்ட பாஜக பொது செயலாளர் செந்திலரசன் ஆகியோர்  வகித்து வரும் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்கள் எனத் தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாஜக நிர்வாகியை தாக்கிய வழக்கில்  திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மற்றும் திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளர் செந்திலரசன் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Goats attacked by mysterious animal bites; Forest department investigation


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இதில் டி என் பாளையம் வனச்சரகமும் அடங்கும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை வசித்து வருகின்றன. குறிப்பாக சிறுத்தை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். அவரது வீடு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை வீட்டு முன்பு உள்ள காலி இடத்தில் கட்டி விட்டு தூங்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை சரவணன் வந்து பார்த்தபோது இரண்டு ஆடுகள் மர்ம விலங்கால் கடிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் அவரது வீட்டு முன்பு ஏராளமானோர் கூடிவிட்டனர்.

பின்னர் இது குறித்து நம்பியூர் போலீசாருக்கும், டி.என்.பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு ஏதேனும் விலங்குகள் கால் தடயம் பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். மர்ம விலங்கு கடித்து இரண்டு ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதேபோல் மர்ம விலங்கு கடித்து கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூட்டம் சாட்டியுள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.