
தமிழ்நாட்டின் 16வது சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று (21.06.2021) சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கியது. இக்கூட்டத்தில் ஆளுநர் உரையின் முக்கிய அம்சமாக நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்; மேகதாது அணை கட்டப்படுவதை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்; மாநிலத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் அளவு குறைவாக இருக்கிறது, அதனை உயர்த்திட வேண்டும்; கலைஞரால் கொண்டுவரப்பட்ட உழவர் சந்தை திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டும்'' என உரையாற்றினார்.
ஆளுநர் உரைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. அலுவல் கூட்டத்தில் 24ஆம் தேதிவரை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை தொடங்குகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 24ஆம் தேதி பதிலுரையாற்றுகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அதேபோல் மறைந்த எழுத்தாளர் கி.ரா, நடிகர் விவேக், துளசி அய்யா வாண்டையார், முன்னாள் எம்எல்ஏ காளியண்ணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.