
தமிழ்நாட்டில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் புதன்கிழமை (29.09.2021) தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக புதன்கிழமை சேலம் வருகை புரிந்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மீண்டும் புதுப்பொலிவுடன் கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர், அவர்கள் வசிக்கும் இடத்திலேயே சிறப்பு மருத்து சேவைகளைப் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் 1,250 மருத்துவ முகாம்களைத் தொடங்கிவைத்து, 24.74 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
சட்டமன்றத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறையின் மானியக் கோரிக்கையின்போது தமிழ்நாட்டில் கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டம் மூலம் ஆண்டுக்கு 1000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் வகையில் மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை, சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலம் குறித்த ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களைக் கண்டறிதல், சுகாதார விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகள் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இம்முகாம்களில் பல்முனை மருத்துவப் பரிசோதனை, கண், பல், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், இருதய நோய்கள், சிறுநீரக கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மனநல மருத்துவம், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் மற்றும் புற்றுநோய் மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படும்.
மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு நோயாளிகளுக்கு முகாம்களிலேயே சிகிச்சையும், இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும். நோயின் தன்மையைப் பொருத்து மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் பரிந்துரை செய்யப்படுவர்.
இந்நிகழ்ச்சியில், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், எம்பிக்கள் பார்த்திபன், கவுதமசிகாமணி, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் தாரேஸ் அஹமது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.