தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுச் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் குப்பனூரிலிருந்து ஏற்காடு செல்லும் வழியில் அடிவாரம் முதல் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலை முழுவதும் பாறைகள் உருண்டு விழுந்து கிடப்பதால் அனைத்து வகையான போக்குவரத்தும் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. மண்சரிவை சீர் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். சேதங்களைக் கணக்கிடப் பொறியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகச் சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குப்பனூர் சாலையில் இதுபோன்ற மண்சரிவை தங்கள் வாழ்நாளில் கண்டதில்லை என்கிறார்கள் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்.