இலக்கியத்துறைக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகதாமி விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகரை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியர் கே.வி.ஜெயஸ்ரீ. கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் படித்தது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில் திருவண்ணாமலையில் தான். அரசியல் விமர்சகரும், மொழி பெயர்ப்பாளரும், எழுத்தாளருமான உத்திரகுமாரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
இவரது சகோதரி தான் மொழி பெயர்ப்பாளரும், வம்சி பதிப்பக உரிமையாளருமான கே.வி.ஷைலஜா. ஷைலஜாவின் கணவர் எழுத்தாளர் பவா.செல்லத்துரை.
மொழி பெயர்ப்பாளரான ஜெயஸ்ரீ, மலையாளத்தில் இருந்து பல நூல்களை தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார். மலையாளத்தின் பிரபல இலக்கிய எழுத்தாளர் மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாள் என்கிற நாவலை தமிழில் மொழிபெயர்த்தார் ஜெயஸ்ரீ. அந்த நூலில் மொழி பெயர்ப்புக்காக தான் அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்புக்காக பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். அதில் முக்கியமானது, உயர்ந்தது இந்த சாகித்ய அகாடமி விருது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்திரகுமார்-ஜெயஸ்ரீ தம்பதியின் மகள் சுகானா. இவரும் எழுத்தாளராக, மொழிப்பெயர்ப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நான்கு பெண் படைப்பாளிகள் தான் தமிழகத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஜெயஸ்ரீ யும் அடக்கம்.