Skip to main content

குவைத் தீ விபத்து சம்பவம்; தமிழருக்கு நேர்ந்த சோகம்!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Kuwait Fire Incident; Tragedy happened to Tamils

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்த 195 பேரில் 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

Kuwait Fire Incident; Tragedy happened to Tamils

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான +91 1800 309 3793 (இந்தியாவிற்குள்), வெளிநாடு எனில் +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற இரு எண்களிலும் தொடர்பு கொள்ளவும்” எனத் தெரிவித்திருந்தார். 

Kuwait Fire Incident; Tragedy happened to Tamils

இந்நிலையில் இந்தத் தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் என்பவரின் நிலை குறித்தும் தெரியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவர் அங்குள்ள தரக் கட்டுப்பாட்டு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். 

சார்ந்த செய்திகள்