/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kuwait-fi-art_1.jpg)
குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது மற்றும் பலர் காயமடைந்தது குறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லி உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங், பிரதமரின் முதன்மைச் செயலர் பிரமோத் குமார் மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா மற்றும் மூத்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi-sad-pose-art_10.jpg)
அப்போது இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார். வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடனடியாக குவைத்திற்கு சென்று நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவிற்கு அனுப்பவும் உதவ வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-mks-sad-art_13.jpg)
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான +91 1800 309 3793 (இந்தியாவிற்குள்), வெளிநாடு எனில் +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற இரு எண்களிலும் தொடர்பு கொள்ளவும்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)