
சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜி (28). கந்து வட்டித்தொழில் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அஜித்குமார் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருந்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் இருந்தன. இவரை, கடந்த ஜூலை 24ம் தேதி மர்ம நபர்கள் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்தனர்.
விஜி, கொலை செய்யப்படுவதற்கு முன்பு, அவருடைய நண்பர் ராகுல்ராஜ் என்பவர் தன்னிடம் வாங்கிய கடன் தொகையைத் தராமல் இழுத்தடித்து வந்ததாகவும், அதனால் ராகுல்ராஜ் வீட்டுக்குச்சென்று அவருடைய தாயாரிடம் ராகுல்ராஜை தீர்த்துக்கட்டி விடுவதாக மிரட்டிவிட்டு வந்துள்ளார். இதையறிந்த ராகுல்ராஜ் தன் நண்பர்களுடன் சேர்ந்து விஜியை திட்டமிட்டு தீர்த்துக்கட்டினார்.
இந்த கொலை வழக்குக் தொடர்பாக சேலம் மகேந்திரபுரியைச் சேர்ந்த ரமேஷ்பாபு மகன் ராகுல்ராஜ் (24), குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் வினோத் என்கிற வினோத்குமார் (23), மரவனேரி காந்தி நகரைச் சேர்ந்த செல்வம் மகன் ஜெய் என்கிற ஜெயபிரகாஷ் (28), ஆத்தூக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சர்மல் (23), குமாரசாமிப்பட்டி ராம் நகர் ஓடையைச் சேர்ந்த பெருமாள் மகன் ஸ்ரீரங்கன் (38) ஆகிய ஐந்து பேரை அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
கைதான ஐந்து பேரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், விஜி கொலை செய்யப்பட்ட இடமான ராம் நகர் என்பது மாநகராட்சிக்குச் சொந்தமான வாகனங்கள் நிறுத்தும் இடம் என்பதால் அங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். மேலும், சம்பவத்தன்று மேற்கண்ட ரவுடிகள் விஜியை ஓட ஓட விரட்டிச்சென்று கொடூரமான முறையில் வெட்டிக்கொன்றுள்ளனர்.
இந்த கொடூர செயலால் அப்பகுதியில் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதாக மக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். இதனால், இதுபோன்ற கொடூர செயல்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், விஜி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் மேற்சொன்ன ஐந்து ரவுடிகள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர்.
அவருடைய உத்தரவின்பேரில் ரவுடிகள் ஐந்து பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் ஐவரும் ஆத்தூர் கிளைச்சிறையில் இருந்து இன்று வேலூர் மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.