/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/our-ins-art_49.jpg)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி என்ற இடத்திற்கு அருகில் உள்ள வெக்கி என்ற கிராமத்தில் அகத்தியன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கக் கூடிய காப்பகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த காப்பகம் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த காப்பகம் செயல்பட்டு வருவதற்கு எந்த உரிமமும் பெறாமல் நடத்தி வந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இது தொடர்பாகப் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த காப்பகத்தில் ஆய்வு நடத்தக் கூடலூர் வருவாய்க் கோட்டாட்சியருக்கும், தேவாலா காவல் துணை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று (08.07.2024) சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உரிமம் ஏதும் இல்லாமல் காப்பகம் செயல்பட்டு வந்து தெரிய வந்துள்ளது.
அதே சமயம் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படை வசதி எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்தது. மேலும் காப்பகத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த 20க்கும் மேற்பட்டவர்களின் உடலை அரசு அதிகாரிகளுக்குத் தெரியாமல் காப்பகத்திற்குச் சொந்தமான இடத்தில் புதைத்தது தெரிய வந்துள்ளது இதனையடுத்து இன்று (09.07.2024) ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அங்கு இருந்த 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அரசு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தாமல் 20 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டது தொடர்பாகக் கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் நெலாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இறந்தவர்கள் 20 பேர் யார் என்று குறித்து விரைவில் போலீசார் விசாரணை நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் இறந்தவர்களின் உடல் உறுப்புகள் விற்பனை செய்யும் முயற்சி ஏதும் நடைபெற்றதா என்று கோணத்திலும் போலீசார் விசாரணை தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)