கும்பகோணத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சம்பா சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு நெற்பயிர் நன்றாக வளர்ந்து வரும், சூழ்நிலையில் குளிர்ந்த பருவநிலை நிலவி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கும்பகோணம் அடுத்துள்ள திருப்பனந்தாள் ஒன்றியங்களில் நேற்று (27.11.2019) இரவு கடுமையான மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம்போல் மழைத்தண்ணீர் தேங்கியதோடு ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன.
இதையடுத்து பந்தநல்லூர் அருகே சோழியவிளாகம் கிராமம் உள்ளது. நூற்றுக்கணக்கான கிராமமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு திட்டத்தின் சார்பில் 20- க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு, அங்கு கிராமத்தின் சில மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
அந்த தொகுப்பு வீடுகள் அனைத்தும் காலபோக்கில் பழுதடைந்து அந்தவீடுகள் ஓவ்வொரு மழையிலும் ஒவ்வொருவீடுகள் இடிந்து சேதங்களை உருவாக்கின. அந்த வீடுகளை மராமத்து பணிகள் செய்து சீர் செய்ய வேண்டுமென பந்தநல்லூர், திருமங்கைசேரி, கருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த குறைத்தீர்ப்பு முகாம்களில் குடியிருப்புவாசிகள் தமிழக அரசுக்கு மனு அளித்தனர். அதேபோல் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகேட்டு வரும் வேட்பாளர்களிடமும், வெற்றிபெற்ற எம்,எல்,ஏ, எம்,பிக்களிடமும் மனு அளித்துள்ளனர்.
இந்த சூழலில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் கருணாநிதி மனைவி பங்கஜம் என்பரான விவசாய கூலித்தொழிலாளியின் தொகுப்பு வீடு இடிந்தது, தொகுப்பு வீடு மழையால் ஒழுகியதால் அவரது மகன் வீட்டில் இருந்துள்ளார். இதனால் காயங்கள் மற்றும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்கிறார்கள். அதேபோல் சோழியவிளாகம் மாரியம்மன் கோவிலை சேர்ந்த மாசிலாமணி மனைவி துர்கா (வயது 28) இரண்டு ஆண்குழந்தைகள் அதில் ஒரு குழந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டது. கணவரும் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஓட்டு வீடு கனமழையால் முற்றிலும் சேதம் அடைந்தது.
இதுகுறித்து கிராம மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் திருவிடைமருதூர் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். " தமிழக அரசு சார்பில் தொகுப்பு வீடுகளை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்கிறார் தாசில்தார் சிவகுமார்.