பிரசித்திப் பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவில் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக, வித விதமான வேடங்களுக்கான பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள்.
குலசேகரப்பட்டினம் தசரா விழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பல வித வேடங்களை அணிந்து, நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பொது முடக்கத்தால், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு வேண்டுதலைச் செலுத்த பக்தர்கள் தயாராகி வருகிறார்கள்.
விழாவின் போது, 10 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள், காளி உள்ளிட்ட கடவுள் வேடம் அணிந்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர். இதற்காக நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் வாசல் பகுதியில் பல வித அலங்காரப் பொருட்கள் விற்பனை வந்துள்ளன.
50 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலான அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அலங்காரம் மற்றும் வேடமணிவதற்கான பொருட்கள், இந்தாண்டு 10% முதல் 15% வரை விலை உயர்ந்துள்ளதாக கூறுகிறார்கள் வியாபாரிகள்.
முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின், முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது.