Skip to main content

தினகரனுடன் குண்டர்கள்! -ரவுடி விமர்சனத்துக்கு ராஜேந்திரபாலாஜி பதிலடி! 

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

 

சிவகாசியில் சீவலப்பேரி கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணி சோதனை ஓட்டத்தை பார்வையிட்ட அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி இதோ -  

 

k

 

தேர்தல் தேதி அறிவிப்பு வரும் வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம். ஓபிஎஸ் நேற்று விஜயகாந்தைச் சந்தித்ததன் மூலம் அதிமுக, தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது.  நானா ரவுடி?  தினகரனுடன் உள்ளவர்கள்தான்  குண்டர்கள்  போல் செயல்படுகிறார்கள். அதைக் கண்டிக்கக் கூடாதா? கண்டித்தால் தப்பா? உண்மையை சொன்னால் கசக்கத்தான் செய்யும். நாங்கள் திண்ணையில் உட்காருவோமா? தினகரன் பண்ணையில் உட்காருவாரா? என்பதை தேர்தலுக்குப் பின்  பார்ப்போம். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூறலாம். தினகரன் திருந்தி அதிமுகவுக்கு வந்தால் என்பது போன்ற கேள்விக்கெல்லாம் முதல்வர், துணை முதல்வர்தான் பதில் சொல்ல முடியும். 

 


தினகரன் குடும்பத்தில் எனக்கு உதவியவர்கள் தற்போது அவரிடம் இல்லை. தினகரன் தனிமரமாக இருக்கிறார்.  அவர் வெற்றிக்கு நாங்கள் பணியாற்றியிருப்போம், அவரும் உதவி செய்திருப்பார்.  அது அரசியல் ரீதியான உறவு. அதற்காக,  அதிமுக வை அவர் அழிக்க நினைத்தால் வேடிக்கை பார்க்க முடியாது. டிடிவியின்  நடவடிக்கை அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிலும், திமுக ஆதரவு நிலைப்பாட்டிலும் உள்ளது.  முதல்வர் எடப்பாடி மீது அவதூறு பேசுவதால்தான்  என்னைப் போன்றவர்கள் பேச வேண்டியதிருக்கிறது. மற்றபடி,  தனிப்பட்ட முறையில் அவரைத் தாக்குவது என்னுடைய  இயல்பு கிடையாது.  மரபும் கிடையாது.

 

k


21  தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் எங்களுக்கு முக்கியம்தான் அதிலென்ன சந்தேகம்? எடப்பாடி ஆட்சியைத் தக்க வைப்பதற்கு  எங்களுடைய இலக்கு சட்டமன்ற தொகுதிகள் எனச்சொல்வது உண்மைதான்.   திமுகவுக்கும் அதிமுகவுக்கும்  அரசியல் ரீதியாக மோதல் உள்ளது. அதனால்,  அவர்கள் எங்களை நல்லபடியாகச் சொல்ல மாட்டார்கள்.


.உறுதியான இந்தியா, மகிழ்வான தமிழகம்.  தைரியமான், நேர்மையான பிரதமராக மோடி  இருக்கிறார்.  வலுவான பாரதம், வல்லரசு நாடாக உருவாக,  நரேந்திர மோடி பிரதமர் ஆக எங்கள் கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

 

தன்னுடைய சொந்த நிலைப்பாடு குறித்தும், கட்சியின் நிலைப்பாடு குறித்தும்  வெளிப்படையாக ‘உண்மை’ பேசுவதால், தனிப்பட்ட முறையில் தனக்கு எதுவும் சிக்கல் வந்துவிடக் கூடாது என்ற பயமே இல்லாமல், செய்தியாளர்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் அதிரடியாகப் பதில் சொல்பவராக இருக்கிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. 


 

சார்ந்த செய்திகள்