கொங்கணாபுரம் சனி சந்தையில், ஆடு, கோழி, காய்கறிகள், பழங்கள் விற்பனை மூலம் இன்று (25/06/2022) ஒரே நாளில் 6 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சந்தை கூடுவது வழக்கம். வழக்கமான மளிகை பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களும் விற்பனை செய்யப்படும் தளமாக இருந்தாலும் கூட, இறைச்சிக்கான ஆடு விற்பனைக்கு இந்த சந்தை பெயர் பெற்றதாகும்.
சேலம், இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் ஆடு, கோழிகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். இன்று (ஜூன் 25) கூடிய சந்தையில் 10 கிலோ எடையுள்ள ஆடு 5 ஆயிரம் முதல் 6,400 ரூபாய் வரையும், 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடுகள் 10,300 முதல் 12,600 ரூபாய் வரையும், வளர்ப்பு குட்டி ஆடுகள் 3,000 ரூபாய் வரையிலும் விற்பனை ஆயின.
ஆடுகள் மட்டுமின்றி பந்தய சேவல்கள் விற்பனைக்கும் இந்த சந்தை சிறப்பு வாய்ந்தது. இன்று ஒரே நாளில் 3500 பந்தய சேவல்கள் விற்பனை ஆகின. காகம், கீரி, செங்கருப்பு, மயில், சுருளி ரக பந்தய சேவல்கள் 1000 முதல் 3500 ரூபாய் வரை விற்பனை ஆகின. இவை தவிர 130 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன. 60 கிலோ கொண்ட சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் 1200 முதல் 1800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி கிலோ 25 முதல் 35 ரூபாய் விற்பனை ஆனது. பலாப்பழங்கள் ரகத்திற்கேற்ப 100 முதல் 250 ரூபாய் வரை விற்பனை ஆனது. கொங்கணாபுரம் சனி சந்தையில், இன்று ஒரே நாளில் 6 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக சந்தை பொறுப்பாளர்கள் கூறினார்கள்.