













கொள்ளிடம் ஆற்றில் திடீரென அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் படகு கவிழ்ந்த விபத்தில் 39 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் கதி என்ன ஆனது என தெரியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் ரப்பர் படகுகளிலும், தோனிகளின் மூலமும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் மேலராயநல்லூர் என்கிற கிராமம் கொள்ளிடம் ஆற்றின் இடையில் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்காக தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பாபநாசம் பகுதியை சேர்ந்த 41 பேர் படகுகில் அங்கு சென்று விட்டு மீண்டும் தஞ்சை மாவட்டத்திற்கு திரும்பும்போது அதிக தண்ணீரில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து தஞ்சை மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்ட கரைகளின் வழியாக, தீயனைப்பு காவலர்கள் மூலம் இதுவரை 39 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ராணி, சிவப்பிரகாசம், பழனிச்சாமி, ஆகிய மூன்று பேர் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியில் இருந்து தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் வருவாய்த்துறையினர் தீயணைப்பு துறையினர் பொதுப்பணித் துறையினர் காவல் துறையினர் என அனைத்து துறை அதிகாரிகளும் அங்கு முகாமிட்டு காணாமல் போன மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.