Skip to main content

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்; இபிஎஸ்சிடம் சாட்சியப்பதிவு

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
Kodanadu casee; Testimony to EPS

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக தற்போது வரை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக தன்னை தொடர்பு படுத்தி வீடியோ வெளியிட்டதாக டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சாட்சிகளை பதிவு செய்வதற்காக வழக்கை மாற்று நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் வளாகத்திலேயே இருக்க கூடிய மாற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இயலாது எனவும், தனது வீட்டிலேயே சாட்சியை பதிவு செய்ய வழக்கறிஞரை ஆணையராக நியமிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நேரில் ஆஜராகி எடப்பாடி பழனிசாமி சாட்சியம் அளிக்க விலக்கு அளித்ததோடு, அந்த நடைமுறையை அவருடைய வீட்டிலேயே மேற்கொள்வதற்காக எஸ்.கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டிருந்தார். இந்த தனி நீதிபதியினுடைய உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது சபிக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது மாற்று நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக, அவர் கூறும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த நீதிபதிகள், 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற கருத்தை மீண்டும் நினைவுபடுத்துவதாகத் தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி மாற்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க ஆஜராக அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் எஸ்.கார்த்திகைபாலன் எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியப் பதிவு செய்துள்ளார். பெறப்பட்ட சாட்சியப் பதிவை, இதுதொடர்பான வழக்கறிஞர் அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்