கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில், விசாரணை வரும் அக்டோபர் 28- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு வந்த போது, இதுவரை 316 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றதாகவும், 516 செல்போன் தடையங்கள் கைப்பற்றி ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் விசாரணை விரிவுபடுத்த வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாலும், வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் வாளையார் மனோஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும் கூடுதல் அவகாசம் வேண்டும் என நீதிபதியிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இதையேற்ற நீதிபதி முருகன், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வரும் அக்டோபர் 28- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், வழக்கில் புதிய திருப்பமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் சகோதரர் தனபாலிடம் இருந்து 13 செல்போன்கள் மற்றும் ஆறு சிம் கார்டுகளைப் பறிமுதல் செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.