தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 11 பேரில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் விசாரணையின் பொழுது தப்பிக்க முயன்றதோடு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த என்கவுன்டர் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரவுடிகள் சுட்டுப் பிடிக்கப்படுவதோடு, பயத்தில் சரணடைந்தும் வருகின்றனர். இந்நிலையில் சென்னை அருகே தலைமறைவாக இருந்த ரவுடியை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆறு மாதங்களாக ரவுடி சேதுபதி போலீசார் கண்ணிலிருந்து தப்பி தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் சென்னை புழல் அருகே சூரபட்டு பகுதியில் ரவுடி சேதுபதி தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைக்க, அங்குச் சென்ற போலீசார், துப்பாக்கி முனையில் சேதுபதியைக் கைது செய்துள்ளனர்.
ஐந்து கொலை வழக்குகளும், 30-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளியான சேதுபதி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் சிக்கியிருந்த நிலையில் தலைமறைவாக இருந்தார். தற்பொழுது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் ரவுடிகளை கைது செய்து வரும் நிலையில் துப்பாக்கி முனையில் ரவுடி சேதுபதியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.