
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் தனியார் பள்ளியில் பள்ளி மாணவனுக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையாகவே நெல்லை மாவட்டத்தில் சாதிய ரீதியிலான பழிக்குப் பழி தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தனியார் பள்ளியில் கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அருகிலே இருக்கக்கூடிய பிரபல தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் வகுப்பு நேரத்திலேயே பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவனை மாணவர் ஒருவர் வெட்டியுள்ளார். உடனடியாக இதனைக் கண்ட ஆசிரியர் மாணவனை தடுக்க முயன்ற பொழுது ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
காயமடைந்த மாணவர், ஆசிரியர் என இருவரும் அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரிவாளால் வெட்டிய மாணவன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட மாணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக சென்ற காவல்துறை துணை ஆணையர் மற்றும் காவல்துறையினர் பள்ளி வளாகத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாளையங்கோட்டை பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.