
சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரது மகன் சிவன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 18ஆம் தேதி அவரது நண்பர்கள் வில்லிவாக்கம் ராஜேஷ் கண்ணா, ஈக்காட்டுத்தாங்கல் சம்பத், புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ், தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரா ஆகியோருடன் விழுப்புரம் அருகே ரியல் எஸ்டேட் தொழில் விஷயமாக காரில் சென்றுகொண்டிருக்கும்போது, மதுரையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நாகராஜ் என்பவர் சிவனிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அதையடுத்து இரு தரப்பினரும் விழுப்புரம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் அமர்ந்து பேசியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் தனித்தனி கார்களில் கண்டாச்சிபுரம் பழவந்தாங்கல் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது கண்டாச்சிபுரம் காட்டுப்பகுதி அருகில் அவர்கள் சென்ற காரை வழிமறித்து, சிவன் மற்றும் ராஜேந்திரா ஆகிய இருவரையும் மர்ம கும்பல் கடத்திச் சென்றனர். இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேரடியாக பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து கடத்தப்பட்டவர்களைத் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதில், கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட இருவரில் ஒருவரான ராஜேந்திரன் என்பவரை கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் சம்பவத்தன்று இரவு காரிலிருந்து இறக்கி விட்டுவிட்டு, சிவனை மட்டும் கடத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் கடத்தப்பட்டவரின் செல்ஃபோன் எண்களை தொடர்ந்து ஆய்வு செய்தனர். அதனடிப்படையில், தாராபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பிடிபட்டார்.
அவரிடம் விசாரித்ததன்அடிப்படையில், சிவனை கடத்திய கும்பல்நேற்று காலை அவரை கரூர் குளித்தலை பகுதியில் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மேலும் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தினார்கள். இந்த நிலையில், விழுப்புரம் காவல் நிலைய எல்லை பகுதியில் உள்ள பூதமெடு அருகே உள்ள கூட்டு சாலையில் கடத்தப்பட்டவரின்செல்ஃபோன் சிக்னல் கிடைத்துள்ளது. அதன் மூலம் அதிவேகமாக வந்த காரை மடக்கி நிறுத்தி, அதில் ஆய்வு செய்ததில் கடத்தப்பட்டிருந்த சிவனை போலீசார் மீட்டனர்.

மேலும், காரில் சிவனை கடத்திய 5 நபர்களையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் விசாரணையில், அவர்கள் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், காங்கேயம் முத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தில், சென்னை திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்நாதன், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சத்யா ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடம் இருந்து போலீசார் கைத்துப்பாக்கி, தங்கச் செயின், மோதிரம், பிரேஸ்லெட் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், இரிடியம் இருப்பதாக சிவன் கூறியதால் நாகராஜ் கும்பல் ரூபாய் 6 லட்சம் பணத்தை சிவனிடம் கொடுத்துள்ளது. இதையடுத்து இரிடியமும் கொடுக்கவில்லை, பணத்தையும் கொடுக்காமல் சிவன் தரப்பு ஏமாற்றியதால், நாகராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் கடத்தல் சம்பவத்தை நடத்தியுள்ளார். இதையடுத்து, அவர்கள் ஐவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)