மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர் பேசியதாவது, லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அந்த வகையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். பின்பு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மன்சூர் அலி கான் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்தநிலையில் குஷ்பு, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒருவர் குஷ்பு-வை டேக் செய்து, அப்போது ஏன் மகளிர் ஆணையம் வரவில்லை என குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த குஷ்பு, “ஒரு பெண்ணை அவமதிக்கும் விதமாக தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இது தான் திமுக-காரர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது. ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைக் காட்ட முடியும். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்பிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது. உங்களைப் போன்ற முட்டாள்கள் ஸ்டாலினை சுற்றி இருப்பது அவருக்கு அவமானம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர்களை போல இருக்கும் முட்டாள்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என மு.க ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.
குஷ்பு தனது பதிவில் சேரி மொழி என பயன்படுத்தியுள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடிகை குஷ்பு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 'பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்’ என விளக்கம் அளித்துள்ளார்.