Skip to main content

'தி கேரளா ஸ்டோரி' வலுக்கும் எதிர்ப்புகள்; களத்தில் முதல் போராட்டம்

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

 

'தி கேரள ஸ்டோரி' திரைப்படம் சமகால நிகழ்வுகளுக்கு மாறான செய்திகளை வெளிப்படுத்துவதாக அப்படத்திற்கு கடும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இப்படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சுவாமிநாதனிடம் கடந்த மே 3 அன்று நேரில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

 

அதேசமயத்தில் இப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. அப்படத்தினை எதிர்க்கும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து மஜக ஜனநாயக வழியில் போராட சகல தரப்புக்கும் அழைப்பு விடுத்தது. இதனைத் தொடர்ந்து 'தி கேரள ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிரான முதல் கள எதிர்ப்பை மஜக பதிவு செய்துள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில், தமிழக அரசு இத்திரைப்படத்தை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி காலை 11 மணிக்கு மஜக சார்பில் திடீர் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட இரண்டரை மணி நேரத்தில் நடைபெற்ற இப்போராட்டக் களத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார். அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது, இக்களத்தில் சமூகநீதி அமைப்புகள்  மற்றும் ஃபாஸிஸ எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் கட்சிகள் இணைவார்கள் என்றும் இது ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் என்றும் கூறினார். இதில் மஜகவினரோடு ஜமாத் நிர்வாகிகள், தமுமுக, SDPI நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வுக்கு மஜக மாவட்ட துணைச் செயலாளர் கட்டிமேடு ரஹ்மத்துல்லா தலைமை ஏற்று வழி நடத்தினார். இதில் திருத்துறைப்பூண்டி மஜக ஒன்றிய செயலாளர் நிஜாம் மைதீன், மாவட்ட IT செயலாளர் கட்டிமேடு ஆசிப், கத்தார் மண்டல நிர்வாகி ராவுத்தர், கிளை செயலாளர் அசாரூதீன், பைசல் அஹமது, முகமது பைசல், சாகுல்ஹமீது, மாலிக், ஷேக் முகமது, ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

‘தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம்; முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
The Kerala Story film issue Chief Minister Pinarayi Vijayan strongly condemned

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான இந்தி படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் இப்படம் இருப்பதாக சர்ச்சையானது. தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன.

அதே சமயம் மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே பெற்றாலும் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தூர்தர்ஷனில் இன்று (05.04.2024) இரவு 8 மணிக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பினராயி விஜயன் தெரிவிக்கையில் “அரசு தொலைக்காட்சிகள் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக  ஒரு போதும் மாறக்கூடாது. வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை கேரளா ஒருபோதும் அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி ஒளிப்பரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.